அட்டன் – டிக்கோயாவில் கடும் மழை ; 50 வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்.!

36

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை நேரத்தில் நிலவும்  சீரற்ற காலநிலையினால் கொட்டித்தீர்க்கும் மழையால் அட்டன் டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் அட்டன் – டயகாமம் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் அட்டன் டிக்கோயா பகுதியில் பெய்த கடும்மழையினால் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அட்டன் – போடைஸ் டயகாமம் வீதி உட்பட பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக டிக்கோயா போடைஸ் தோட்ட  வழியாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் பாயும் டிக்கோயா கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குறித்த 50  வீடுகளும் பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் வெள்ளநீர் வடிந்தோடிக் கொண்டு இருக்கின்ற போதிலும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது இதனால்

குறித்த வீடுகளில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படும் என தோட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.