வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 226 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்.!

65

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உட்பட 226 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சா வெளியிட்டுள்ளார்.

அவரது தகவலின்படி, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டவர்களில் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் டுபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பதுங்கியிருப்பதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இதுவரை 130க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள சந்தேகநபர்களையும் விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.