வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாட்களின் பின் 3 வயது சிறுவன் மீட்பு!

107

 

வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று வயது குழந்தை 6 நாட்களின் பின்னர் ஜோர்தான் நாட்டு மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது

லாகுவைரா மாகாணத்தில் உள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து ‘கிளீபர் மோரான்’ என்ற இந்த குழந்தை மீட்கப்படும் போது, மீட்புப் பணியாளர்கள் மகிழ்ச்சியரவாரம் செய்யும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் (72 மணித்தியாலங்கள்) இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில், 6 நாட்களின் பின் இந்தச் சிறுவன் மீட்கப்பட்டதை வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் “ஒரு நம்பிக்கையின் தருணம்” என வர்ணித்துள்ளார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் தலைநகர் கராகஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் வெனிசுவேலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 10,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளின்படி சுமார் 58,870 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.