வீட்டிற்கு தீ வைப்பு ; மூவர் உயிரிழப்பு ; மேலும் ஒருவர் படுகாயம்.!!

161

மஹரகம பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுணுவ, எக்சத் சுபசாதக மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்று நேற்று முன்தினம் (18) மாலை   தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டின் மேல் மாடியில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் அந்த வீட்டின் மேல் மாடியில் வாடகை அடிப்படையில் தற்காலிகமாக வசித்து வந்த 55 வயதுடைய தாயும், அவரது 16 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் 46 வயதுடைய கணவர் மற்றும் வீட்டின் கீழ் மாடியில் வசித்து வந்த 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகிய இருவர் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் சிகிச்சை பலனின்றி  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் நடந்த இடத்தில் பெற்றோல் வாசனை வீசியதாகவும், திட்டமிட்ட முறையில்  இனந்தெரியாத சந்தேகநபர்களால் வீட்கு தீவைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், எக்காரணத்திற்காக இந்தத் தீ வைப்பு மற்றும் கொலைகள் இடம்பெற்றன என்பது குறித்த உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்த சிறுமியின் தந்தை தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  மஹரகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.