வவுனியா மாநகர சபையின் செங்கோல், மேயரின் அங்கி காணாமல் போன விவகாரம்: முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

72

வவுனியா மாநகர சபையின் அதிகாரப்பூர்வ செங்கோல் (Mace), மேயரின் அங்கி மற்றும் பதக்கம் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று (01.07.2026) உத்தரவிட்டுள்ளது.

மாநகர சபையின் செயலாளர் நேற்று (30.06.2026) வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து, மாநகர சபை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரை கைது செய்ய அனுமதி கோரி பொலிஸார் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், முன்னாள் மேயர் உட்பட நால்வரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வவுனியா மாநகர சபை மேயர் பதவியில் இருந்து முன்னாள் மேயர் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநகர சபையின் அதிகாரப்பூர்வ சின்னங்கள் காணாமல் போனதாக எழுந்துள்ள இந்த விவகாரம் வவுனியா அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தலைமைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.