வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கம் : வட மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

104

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் , வட மாகாண ஆளுநருக்கு எதிராக இன்று (29) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், பின்னர் மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக முன்னெடுக்கப்பட்டு காமினி மகா வித்தியாலயம் முன்பாக நிறைவடைந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், எதிர்ப்புப் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

வட மாகாண ஆளுநர் கடந்த 24ஆம் திகதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு. காண்டீபனின் பதவியும், மாநகரசபை உறுப்புரிமையும் நீக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிஷாட் பதியுதீன், ப. சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணானது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டியதுடன், மாநகர முதல்வரின் உறுப்புரிமையை மீளப் பரிசீலனை செய்யுமாறும் வலியுறுத்தினர்.