மோஹினி எல்லையில் பாதுகாப்பு தீவிரம்!

86

நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 22ஆம் திகதி மஸ்கெலியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று குறித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மற்றுமொரு கார் விபத்துக்குள்ளானதால், மோஹினி எல்ல பகுதியின் வீதிப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

வளைவுகள் மற்றும் ஆபத்தான நில அமைப்புகளைக் கொண்ட இந்த பகுதியில், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகினால் பாரிய விபத்துக்கள் ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துக்களை தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் வலுவான பாதுகாப்புத் தடுப்புக் கம்பங்கள் அமைக்கப்பட்டதுடன், பாதுகாப்பு வேலியும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், சாரதிகள் ஆபத்தான பகுதியை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவதானத்துடன் பயணிக்கும் வகையில் தேவையான வீதிப் பாதுகாப்பு சமிக்ஞைகளும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்தான பகுதிகளுக்குள் செல்வதைத் தடுத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்ந்து முறையாக பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.