முன்னாள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பு தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு.!!

50

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தளர்வு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பராமரிப்புத் தொகையாகச் செலுத்த வேண்டிய 1.74 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியதற்காக 29 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அந்த நபர், 2024 செப்டம்பரில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தார்.

விடுதலைக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த நீதிமன்றம், இதேபோன்ற சூழலில் இருந்த கைதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் வேறுபாடு காட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டியது. இதன் மூலம் சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சமமான சட்டப் பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி, நீதியமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் அதற்குப் பொறுப்பானவர்கள் என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது.

அந்த நபருக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தளர்வைச் செல்லாததாக்கிய நீதிமன்றம், முன்னைய தண்டனைக்கான பிடியாணை சட்டரீதியாகத் தொடர்ந்தும் செல்லுபடியாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; இது நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்ட நிலைப்பாடாகும்.