மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்.

66

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்நிலையை அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது”

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இன்று வழங்கப்படும் உதவிகள், அவர்களின் துணிச்சலான பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது.

அவர்களின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சாதனை, பின்னர் வரும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவர்கள்.” என தெரிவித்தார்.