மலையகத்தில் 13 வயது மாணவி துஷ்பிரயோகம்: 45 வயது சந்தேகநபர் கைது.!!

48

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிலிகுற்றி தோட்டப் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை லிந்துலை பொலிஸார் நேற்று (21.05.2026) மாலை கைது செய்துள்ளனர். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதியில் வலுத்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் நேற்று காலை முதல் முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் சமூக கவனம் திரும்பியுள்ளது.