மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் BRICS-ல் வரலாற்று உடன்பாடு

90

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும் BRICS உச்சிமாநாட்டில் முக்கியமான கூட்டுப் பிரகடனத்தை வெளியிடுவதற்கு உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டின் ஆரம்ப உரையில் நரேந்திர மோடி, உலகளாவிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சர்வதேச அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் BRICS உறுப்பினர்களான ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளின் மூலம் கூட்டுப் பிரகடனம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரகடனத்தில் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படாமல், ஒருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நிலைப்பாடு வெளிப்படுத்தப்படவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலும் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

BRICS அமைப்பின் சர்வதேச செல்வாக்கை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.