பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்.!

82

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரடியனாறு கித்துள் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பையா வசந்தகுமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு தொடர்பாக அவரது மனைவி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாரின் தகவலின்படி, மதுபானம் அருந்திய நிலையில் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த நபர் விசாரணைக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் பொலிஸாரால் தாக்கப்பட்டே மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அவரது தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுணதீவு பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் காவல் நிலையங்களில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.