பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்.!!

101

வயதான பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை பிள்ளைகளின் பெயருக்கு மாற்றிய பின்னர் அவர்கள் கைவிடப்படும் சந்தர்ப்பங்களில், அந்த சொத்துக்களை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானம், பாதிக்கப்பட்ட முதியவர்களின் நலன்புரி மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

முதுமைக் காலத்தில் பிள்ளைகள் தங்களை கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே பல பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை பிள்ளைகளுக்கு மாற்றுவதாகவும், ஆனால் சொத்துக்களை பெற்ற பின்னர் பெற்றோர்களை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயல்கள் ஒழுக்கமற்றவை என சுட்டிக்காட்டிய அவர், இந்த பிரச்சினைக்கு தீர்வாக தேவையான சட்டமூலங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தின் கீழ், கைவிடப்பட்ட பெற்றோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சொத்துக்கள் அரசாங்கத்தின் காவலின் கீழ் கொண்டுவரப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் நிதி, முதியவர்களுக்கான பராமரிப்பாளர்களை நியமிப்பதற்கும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தரமான முதியோர் இல்லங்களில் தங்க வைப்பதற்குமான செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டில் முதியோர் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதும், குடும்ப ஆதரவின்றி வாழும் முதியவர்களின் எண்ணிக்கை உயர்வதும் சமூக நலன்புரி துறைக்கு சவாலாக மாறியுள்ள நிலையில், முதியோருக்கான சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த முன்மொழிவு பார்க்கப்படுகிறது.