புதிய மெட்ரோ பேருந்து ‘எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்ட பேரழகியை’ போன்றது – கெமுனு விஜேரத்ன விமர்சனம்

57

இலங்கைக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மெட்ரோ பேருந்துகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “தற்போது புதிய பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுமார் 4 கோடியே 20 லட்சம் அல்லது 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த பேருந்துகளை இறக்குமதி செய்து, கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் அந்த விலைக்கு இணையான சேவையை வழங்கி, இலாபகரமாக இயக்குவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். இதுவே தற்போதைய கசப்பான உண்மை.

பொதுவாக அழகிய பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை தற்போதைய இந்த புதிய பேருந்துத் திட்டமானது ‘எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளான ஒரு பேரழகியைப் போன்றது’.

இந்த திட்டத்துக்காக அரசாங்கத்தின் திறைசேரிதான் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளது. நாளாந்தம் இந்த பேருந்துகளை இயக்கும் போது ஏற்படும் நட்டத்தினால், திறைசேரியின் பணமே வீணாக அழியப்போகின்றது” என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை திங்கட்கிழமை (6) முதல் நாடு முழுவதும் உள்ள தனியார் பேருந்துகள் மற்றும் அரச பேருந்துகள் ஆகிய இரண்டிற்கும் புதிய பேருந்து கட்டண திருத்தம் ஒரே நேரத்தில் அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.