பிரான்சில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழர் உயிரிழப்பு.!

68

பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியான சென்-சென்-டெனிஸ் மாவட்டத்தின் பொபினி நகரில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, குறித்த நபர் இருவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

பொலிஸார் வந்தபோது, அந்த நபர் இரண்டு கைகளிலும் கத்திகளை ஏந்தியபடி அதிகாரிகளை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியதாக கூறப்படுகிறது. முதலில் ஒரு பொலிஸ் அதிகாரி அவரை தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், அவர் மீண்டும் கத்திகளுடன் நெருங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் வயிற்றுப் பகுதியில் குறைந்தது இரண்டு முறை சுட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபருக்கு அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கிய போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த வைத்திலிங்கம் புவனேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.