பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கில் பொலிஸாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு.!!

87

அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரராகிய பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான வழக்கில், பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டதாக சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்த வழக்கு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, தேரருக்கு எதிராக தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளன என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் தொலைபேசி அழைப்புச் சான்றுகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேவேளை, சம்பவம் தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப கட்டத்தில் பொலிஸார் வழக்கை சரியாகக் கையாளாமல், தேரருக்கு சாதகமாக வாக்குமூலங்களை பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.