நவீன வசதிகளுடன் கூடிய சபரகமுவ மருத்துவ பீட வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

93

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (04) திறந்து வைத்துள்ளார்.

குறித்த திட்டத்திற்காக சவூதி அரேபியா சுமார் 15 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் இதற்காக சுமார் 2.876 பில்லியன் ரூபாயைப் பங்களிப்பு செய்துள்ளது.

20 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த புதிய வளாகத்தில், 500 மாணவர்களுக்கான விடுதி வசதிகள், 1,060 ஆசனங்களைக் கொண்ட மண்டபம், 6 விரிவுரை மண்டபங்கள், நிர்வாகக் கட்டடங்கள், நூலகம், உணவகம், ஊழியர் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவத்திற்கு முந்தைய வசதிகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ பீடத்தில் தற்போது சுமார் 750 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், வருடாந்தம் சுமார் 160 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கையின் மருத்துவக் கல்வி முறையை வலுப்படுத்துவதிலும், தரமான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதிலும் இந்த புதிய வளாகம் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்தாஸம் அல்கஹ்தானி மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.