சர்வதேச வினோதம் | ஆண்களின் குரல் மட்டும் கேட்காத விசித்திர நோய்!

131

சீனாவில் இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான செவித்திறன் குறைபாடு தற்போது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அந்தப் பெண், ஒருநாள் காலை எழுந்தபோது தன் காதலர் பேசும் குரல் அவருக்குக் கேட்கவில்லை என்பதை உணர்ந்தார். ஆனால், அருகில் இருந்த பெண்களின் குரலும், மற்ற சத்தங்களும் அவருக்குத் தெளிவாகக் கேட்டன.

முதலில் இது ஏதோ தற்காலிகப் பிரச்சனை என்று நினைத்தவருக்கு, மருத்துவமனை சென்றபோதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது!

மருத்துவர்களின் விளக்கம்

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு “Reverse-slope hearing loss” (RSHL) எனும் அரிய வகை நோய் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பாதிப்பு: இவர்களுக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள் (Low-frequency sounds) கேட்காது. ஆண்களின் குரல் பொதுவாக ‘பேஸ்’ (Bass) அல்லது குறைந்த அதிர்வெண்ணில் இருப்பதால், அந்தப் பெண்ணால் ஆண்களின் குரலை மட்டும் கேட்க முடியவில்லை.

அதே சமயம் பெண்களின் குரல் ‘ஹை-பிட்ச்’ (High-frequency) என்பதால், அவருக்கு அது துல்லியமாகக் கேட்டது.

மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு, கோடிப் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மிக அரிய பாதிப்பு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

அதிகப்படியான மன அழுத்தம் (Stress) மற்றும் சரியான தூக்கமின்மை காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். உரிய சிகிச்சைகள் மூலம் இதைச் சரிசெய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.