கொழும்பு மாளிகாவத்தையில் சினிமா பாணி கொள்ளை: முதிய தம்பதியரை மயக்கி 12 இலட்சம் ரூபாய் நகைகள் அபகரிப்பு.!!

108

கொழும்பு மாளிகாவத்தை ரயில்வே குடியிருப்பில் ஓய்வு பெற்ற தம்பதியினரை மயக்கமடையச் செய்து சுமார் 12 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு வாங்க விரும்புவதாக கூறி சல்வார் அணிந்த பெண் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, பின்னர் மேலும் இரண்டு ஆண்களை அழைத்துவர இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டை பார்ப்பது போல நடித்து வந்த அந்த 3 பேர் கொண்ட கும்பல், திடீரென மயக்கமூட்டும் ரசாயனத்தை முதிய தம்பதியினரின் முகத்தில் தெளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அணிந்திருந்த தங்க மோதிரங்கள் மற்றும் காதணிகள் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சம்பவத்திற்குப் பிறகு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாகவும், பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியால் தம்பதியினர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள CCTV காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இதனையடுத்து, தெரியாத நபர்களை வீடுகளுக்குள் அனுமதிப்பதில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாதுகாப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.