ஈரான் அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அறிவிப்பு.!!

47

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்காவின் அதிநவீன MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் ஆளில்லா வோனூர்தி ஈரானின் வான் எல்லையை மீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கெஷ்ம் தீவுப் பகுதியிற்கு அருகே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கையில் ட்ரோன் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MQ-9 ரீப்பர் ட்ரோன் என்பது அமெரிக்காவின் முக்கிய உளவு மற்றும் தாக்குதல் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீப காலமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில், அமெரிக்கா பல MQ-9 ட்ரோன்களை இழந்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ட்ரோன்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவுகள் மிக அதிகமானவை என்பதால், இவ்வாறான இழப்புகள் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு சவாலாக பார்க்கப்படுகின்றன.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் குறைவதற்காக தற்காலிக போர்நிறுத்த நிலை உருவாகியிருந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தங்களது வான் எல்லையை மீறும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் எச்சரித்துள்ளதுடன், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் பதிலடி வழங்கத் தயார் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மீண்டும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.