அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சையளித்த பாதுகாப்பு பணியாளர் .!!

125

இந்தியாவில் பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பகாகா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மருத்துவமனைக்கு அருகே வேனும் டெம்போவும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டியின் ஊடாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அப்போது அங்கு போதுமான மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், ஒரு பாதுகாப்புப் பணியாளர் கையில் ஊசி மற்றும் நூலை எடுத்துச் சென்று நோயாளிக்குத் தையல் போடத் தொடங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பணியாளர் நோயாளிக்கு தையல் போடும் காட்சியை நேரில் பார்த்த நோயாளர் காவு வண்டியின் சாரதி, சிகிச்சைப் பெற்ற நோயாளி ஆகியோர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய ஒருவர் உயிருக்குப் போராடும் வேளையில், தகுதியற்ற நபர் சிகிச்சை அளித்தது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி விளக்கமளிக்கையில்,

“எங்கள் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மருத்துவர், தாதி மற்றும் உதவியாளர் வெற்றிடங்கள் உள்ளன. இருக்கும் ஆட்களை வைத்துத்தான் சமாளிக்கிறோம். அன்று விபத்தில் வந்த நோயாளிக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. எனவே, மருத்துவரின் மேற்பார்வையில்தான் அந்த பணியாளர் தையல் போட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பின்னர், ஒரு அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையல் போடும் சிகிச்சை அளிப்பதற்குக் கூட ஊழியர்கள் இல்லாமல், பாதுகாப்புப் பணியாளரை வைத்துச் சிகிச்சை அளிப்பது பிஹாரின் மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை காட்டுகிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.